
ஸ்ரீ பாலமுருகன்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

நைவேத்யம்: பஞ்சாமிர்தம், பருப்பு பாயசம்.
சிறப்பு பூஜைகள்: சுக்ல சஷ்டி, கிருத்திகை, ஸ்கந்தசஷ்டி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் ஆகிய தினங்களில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
பலன்கள்: எதிரிகளிடமிருந்து பயம் விலகவும், மக்கட்பேறு, பூமி வாகனம் வாங்கவும், மூல மந்த்ர சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை 21 சஷ்டியில் செய்து பஞ்சாமிர்தம் நைவேத்யம், அரளி மாலை சாற்றி வழிபாடு செய்து வர அனைத்து வித பிரச்சினைகளும் நீங்கும்.
கொவ்வைச் செவ்வாயும் குமிண்சிரிப்பும் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களை ஆகர்ஷணம் செய்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து தனம் தான்யம் பசு புத்ராலாபம், கிரகம், வாகனம், பூமி, நன் மக்கட்பேறு அனைத்தையும் வழங்கிட முனைப்போடு காத்திருக்கின்றான். நமது வேண்டுதலுக்காக அவன் நம்மை எதிர்நோக்கி அமர்ந்திருக்கிறான். செறுபகை அறுத்து வெற்றிமாலை சூட்டிடவும் உலகத்தில் சண்டை சச்சரவுகள் இன்றிச் சமாதனம் நிலவிடவும் அருளாசி வழங்கி வருகின்றான். இந்த இளங்குமரனை நம் நெஞ்சத்தில் ஏற்றி வழிபடுவோமாக.
”சுப்ரமண்யம் சரவணபவ ஓம்” என்று 18 முறை கூப்பிடுங்கள். முனைப்போடு வந்து நிற்பான். முறையான வரிசைகள் தந்து செல்வான்.
பாலன் தேவராயன் இயற்றிய ஸ்கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் கீழ்கண்ட வரிகளை 36 தடவைகள் உச்சாடனம் செய்து வர ஓடோடி வந்து நிற்பான். உற்ற துணையாய் இருந்து காத்து நிற்பான். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட அடித்தளம் அமைத்து நிற்பான்.
”ஐயங் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும்
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்”
(குறிப்பு: இந்த வரிகளில் ஐம் க்லீம் செளம்
செளம் ஐம் க்லீம்
க்லீம் செளம் ஐம்
என்ற மந்திர ஒலி மறைபொருளாய் அமைந்துள்ளது. இதுவே கந்த சஷ்டிக்
கவசத்தின் சாரம் என்பது பெரியோர் வாக்கு.)