
ப்ரத்தியங்கிரா தேவி
ஸிஹ்ம வக்த் ரோர்த்வ கேசிம் சூலம் முண்டஞ்ச ஸர்பம்
டமரு புஜயுதாம் குந்தளா துக்ர தம்ஷ்ட்ராம் - ரக்தேஷ்
வாலீட ஜிஹ்வாம் ஜ்வலத நல காயத்ரி சாவித்ரி
யுக்தாம் த்யாயேத் ப்ரத்தியங்கிராம் தாம் மரண
ரிபு வ்யாதி தாரித்ரிய நாசாம்.

நைவேத்யம்: கொண்டைக்கடலை சுண்டல், புளியோதரை, பானகம், சர்க்கரைப் பொங்கல்.
சிறப்பு பூஜை: ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத்தில் மாதுளை முத்துக்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை நடைபெறும். அம்மாவாசை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.
பலன்கள்: இவளை வழிபடுவதால் பில்லி, ஏவல், சூன்யம் விலகும், காரியத்தில் வெற்றி, குடும்ப ஒற்றுமை, வேலைவாய்ப்பு, எதிரிகளின் பயத்தை விலக்கி நம்மை காப்பாற்றுவாள்.
நரஸிம்ஹரை அடக்க எழுந்த சரபமூர்த்திக்கு உதவ வந்தவள் இந்த பத்ரகாளி. இவளையே ப்ரத்தியங்கிரா என்றும், உக்ர ப்ரத்தியங்கிரா என்றும் கூறுவர். பயங்கரமான தோற்றம் கொண்டதால் உக்ர என்றும், சரப சக்தி என்றும் கூறுவர். இவள் சரபேஸ்வரர் நெற்றியிலுள்ள நெருப்புகளிலிருந்து உக்ரப்ரத்தியங்கிரா என்ற பத்ரகாளியாக உதித்தாள். இவளே அதர்வண பத்ரகாளி ஆவாள் இவளுடைய மந்திரங்கள் யாவும் சத்ருக்களை வெற்றி கொள்ள பயன்படுவதாக உள்ளன.
இவளுக்கு ஆயிரம் ஸிம்ஹ முகங்களும் இரண்டாயிரம் கைகளும், சிவப்பேறிய கண்களும், கழுத்தில் கபால மாலையும், கைகளில் ஆயுதங்கள் ஏந்தியும், நாவை வெளியில் தொங்கவிட்டவாறு காட்சி அளிப்பாள். இவள் சரபேஸ்வரனின் துணைவி ஆவாள்.
இத்தகைய அமைப்புக் கொண்ட ப்ரத்தியங்கிரா தேவி இவ்வாலயத்தில் நாக்கை தொங்கவிட்ட நிலையில் உக்கிரமாக இல்லாமல் சாந்த மூர்த்தியாக கிரீடத்தை சுற்றி அக்னி ஜ்வாலையும், ஏழுதலை நாகமும், கழுத்தில் கபால மாலையும், வில், கோடாலி, டமருகம், நாகம், திரிசூலம் கைகளில் ஏந்தியவாறு சதுர்புஜத்துடனும் ஸிம்ஹ முகத்துடன் நாவை உள்ளடக்கி ஸிம்ஹ வாகனத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும், நகரத்திலும், எழுந்தருளி வழிபடும் தெய்வமாகவும், மக்களைக் காத்து ரட்சிக்கவல்ல, தாயாகவும், ஆபத்துக் காலங்களில் ஓடோடி வந்து அபயக்கரம் கொடுத்துக் காக்கும் தேவதையாகவும் பத்ரகாளியம்மன், கோலவிழி அம்மன், கருமாரி அம்மன், மாரியம்மன், முத்தாரம்மன், வடிவுடை அம்மன் ஆகிய பல திருநாமங்களில் அருள்பாலித்து வருபவளாகவும் விளங்கி நிற்கும் இந்த அம்மை ப்ரத்தியங்கிராதேவியின் அம்சமாக ஆட்சி செலுத்தி வருகிறாள் என்றால் அது மிகையாகாது.
ப்ரத்தியங்கிராதேவி சுடர்விட்டு ஒளிரும் தீபத்தின் அனலாக இருக்கின்றாள். உள்ளத்து உணர்வுகளில் கனலாக வெளிப்படுகிறாள். பூக்குழியில் இறங்கி வந்தால் புன்முறுவல் பூத்து நிற்பாள். புளகாங்கிதம் அடைந்து நம் உள்ளத்தில் அமர்ந்திருப்பாள். நம்மைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைப்பாள். மானம் காத்து நிற்பாள். சிம்ம கர்ஜனை செய்து நிற்பாள்.
எம் இடர் தீர்த்து வைப்பாள். சங்கடங்கள் வரும்போது மனதார வாழ்த்திடுவாள். மங்கையின் கற்புக்குக் காவலாய் இருந்திடுவாள். மாங்கல்ய பலம் தந்து நிற்பாள். தடைபட்டு நின்று வரும் கன்னியரின் திருமணத்தை கணப்பொழுதில் நடத்திவைப்பாள். எந்த இடர் எந்த வழியில் வந்தாலும் துடைத்திடுவாள். எம்மை ரட்சித்து நின்றிடுவாள். நீள் கடலாய், நெடுவானாய் தாயாக வந்துதிப்பாள். நலம் பல கூட்டுவிப்பாள்.
ப்ரத்தியங்கிரா தேவியின் பாதார விந்தங்களை சரணடைவோம். சந்தோஷம் பொங்கிட வாழ்வோம்.