Brahmma Sakthi Temple
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் அவதாரத் திருநாள், ஆவணி 20, (ஞாயிறு 28-08-2016) மாலை 4:00 மணி, L. G. ஹால். ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறும்.
Deities

வரம் தரும் வராஹி தேவி

“ மோழல் போன்ற முகம்படை மூர்த்தமாய்
கேழல் மாமுகக் கேசவ சக்தியாய்
வாழல் கொண்ட வாராஹி கழல்வலம்
சூழல்கண்டுல் கூழல் தொலைப்பமால் ”
Sree Varaahi

நைவேத்யம்: பூமிக்கடியில் விளையும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வேர்க்கடலை, கேரட், இஞ்சி, முள்ளங்கி, சேப்பங்கிழங்கு, ஆள்வள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு இதைத் தவிர சாம்பார் சாதம், சர்க்கரைப்பொங்கள், பானகம் நைவேத்யம் செய்யப்படுகிறது.

சிறப்பு பூஜை: ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ராகு காலத்தில் 12 ஒரு ரூபாய் காசுகளும் வெள்ளைத் தாமரையும் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவிக்கு வெள்ளைத் தாமரையோடு 1008 ரூபாய் நாணயங்களால் வாராஹி ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், வாராஹி மாலை அர்ச்சனையும் நடைபெறும்.

பலன்கள்: அர்ச்சனை செய்யப்படும் நாணயத்தை கொண்டு எந்த செயலை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது அம்மாவின் அருள்வாக்கு. மேலும் தம்பதியரின் ஒற்றுமை, மாங்கல்ய பாக்கியம், தேர்வில் வெற்றி, வழக்கில் வெற்றி, ஞானம், தனம், பூமி, வாகனம் வாங்குதல் போன்றவை வாராஹியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

சப்த மாதாக்களில் ஒருவராகப் போற்றி வணங்கப்பட்டு வருபவள் வாராஹி தேவி. லலிதா மஹா திரிபுரசுந்தரியின் குதிரைபடைத் தலைவியாக வலம் வருபவள். கையிலே உலக்கை கொண்டு உலாவரும்போது தண்டினியாகக் காட்சி அளிப்பவள். வெள்ளைக் குதிரையின் மீது இடக்கையிலே கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு வலக்கையில் உருவிய வாளினை ஏந்திக் கொண்டு ஆரோகணித்து வரும்போது அஸ்வாரூடப்பரமேஸ்வரியாகப் பவனி வருபவள்.

சப்த மாதாககளில் ஒருவராகக் கருதப் பட்டாலும் இந்த அம்மையே மூவரும் யாவரும் தேவர்களும் போற்றத்தக்க ஆதிபராசக்தியாகவும் கருதி வழிபடுதலும் ஒரு மரபாக இருந்து வருகிறது. இதனைக் கீழ்வரும் வாராஹி மாலை பாடல் விளக்கும்.

“வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்தில்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி
மால் அயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே”

வாராஹிதேவி சரஸ்வதி தேவியின் ஓர் அம்சமாக விளங்குவதால் இவளே வாக்குக்கு அரசி. வலிமைக்கு அரசி. வளமைக்கு அரசி. செழுமைக்கு அரசி. செங்கோலுக்கு அரசி. கருணையின் மொத்த வடிவமாகக் காட்சி தருபவள் வாராஹிதேவி. வாராஹியை வார்த்தாளி என்றும் சொல்லுவார்கள் ஏனெனில் அவள் தன்னுடைய குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்துகிறாள். எதிரிகளின் வாக்கினைச் சீர்குலைக்கிறாள். அடக்கி வைக்கிறாள்.

இத்தகைய வலிமை பொருந்திய வாராஹி தேவி நமது பிரம்மசக்தி ஆலயத்தில் சாந்த சொரூபியாக கத்தி, சங்கு, ஓலைச்சுவடி, திரிசூலம் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி சதுர்புஜ நாயகியாக மகிஷ வாகனத்தில் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்கி வருகின்றாள். தேவீம் நித்யப்ரசன்னாம் என்று தியான ஸ்லோகத்தில் வர்ணிக்கப்படும் இந்த அம்மை கேட்டதைக் கேட்டவுடனே கேட்டவாறு வழங்கும் இயல்புடையவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து குறைகள் தீர்க்கும் தெய்வத்தாய் அவள்.

தெந்திசைத் தெய்வம் என்று வாராஹி அம்மை தியான சுலோகத்தில் போற்றப்படுகிறாள். செந்தமிழால் போற்றினாலும் பேசினாலும் இந்த அம்மைக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே நெகிழ்ந்து போய் அவர்களது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி பரவசத்தில் ஆழ்த்திடுவாள். திருவானைகாவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் வாராஹியின் அம்சத்தில் உதித்தவள் என்று சொல்லப்படுகிறது. அரசியல் செல்வாக்குடன் திகழவேண்டுமானால் இவளையே சரணம் அடைதல் வேண்டும். அரசு கட்டிலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கு வாராஹிதேவியின் அம்சமான அஸ்வாரூடா தேவியால்தான் முடியும். தர்மம் தழைத்திடவும், அதர்மம் அழிந்திடவும், எங்கும் அமைதி நிலவிடவும், வாராஹி தேவியை ஒருமையுடன் சிந்திப்போம். உய்வு பெறுவோம். இந்த உலகத்தை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றும்படி வேண்டிக்கொள்வோமாக.

ஓம் ஐம் க்லெளம் ஐம் மகா வாராஹியே நமக என்று உச்சாடனம் செய்வோம். வாராஹி தேவியின் தரிசனம் காண்போம். அவள் வாரி வழங்கும் பரிசுகளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

”ஐம் க்லெளம் ஐம் எனத் தொண்டர் போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடு கின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே”

வாராஹி தேவியை சரணடையுங்கள். வளர்பிறையாகத் திகழுங்கள். பொருட்களைப் பெற்றுப் பெருமிதத்தோடு வாழுங்கள்.

Donate


ஆலய நேரம்

6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM


அருள்வாக்கு

நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி


கூட்டுப் பிரார்த்தனை

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.