
சந்தான பகவதி
அருண கிரண ஜாலை ரஞ்சிதா சாவகாசா
வத்ருத ஜப படீகா புஸ்தகா பீதிஹஸ்தா |
இதர கரவராட்யா புல்லகல் ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாணசீலா ||
Sree Santhana Bhagawathi
சிறப்புப் பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் பெற வேண்டும் பக்தர்கள் 48 வாரம் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் கல்கண்டு அர்ச்சனை செய்துவர நன்மை உண்டாகும். காளஸர்ப்பதோஷம் மற்றும் ஸர்ப்பதோஷம் நீங்க பாலாபிஷேகம் செய்து வெள்ளியில் செய்த நாகம் ஒன்றை வாங்கி நாகராஜாவை வேண்டி வலதுபுறமாக மூன்று தடவைகள் சுற்றியும் நாக கன்னியை வேண்டி இடது புறமாக மூன்று தடவைகள் சுற்றியும் தோஷம் தீர வேண்டி உண்டியலில் போட தோஷங்கள் விலகும்.
குறிப்பு
இவ்வாலயத்திலுள்ள மூர்த்தங்களின் நூதன லட்சணங்களின் மூலங்களைச் சரிவர உணர்த்த இயலவில்லை. ஏனெனில் அவைகள் யாவும் அருள்வாக்கின்படி அமைந்த மூர்த்தங்களாகும். அதற்குறிய சரியான விளக்கங்களை அன்னையால் மட்டுமே அளிக்க முடியும். அதற்கான நேரம் வரவில்லை என்று அன்னை அருள்வாக்காகக் கூறியுள்ள படியால் எங்கள் சிற்றறிவுக்குப் பட்டதை மட்டும் இங்கு எழுதுகிறோம்.
நைவேத்யம்: தயிர் சாதம், பால் பாயசம், கற்கண்டு சாதம், பருப்பு சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. மேலும் குழந்தைகள் விரும்பும் சாக்லேட், ஐஸ் க்ரீம், பிஸ்கட் யாவும் சந்தான பகவதி விரும்பி ஏற்றுக்கொள்ளும் நைவேத்யங்கள்.
சிறப்பு பூஜைகள்
ஒவ்வொரு வியாழக்கிழமை கல்கண்டு அர்ச்சனையும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக் கிழமையும் குங்குமம் அர்ச்சனையும் மஞ்சள் அர்ச்சனையும் நடைபெறும்.
பலன்கள்
1. ஒவ்வொரு வியாழக்கிழமையும் தம்பதியர்கள் 48 வாரம்
கல்கண்டு அர்ச்சனை செய்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.
2. நாகதோஷம், பித்ருதோஷம், குலதெய்வ குறைபாடுகள் நீங்கும்.
சித்தர்களின் சிந்தையுள்ளே ப்ரம்மசக்தியின் சொருபமாக ஒளிவிட்டுப் பிரகாசிப்பவள் “வாலை”. இவள் கன்னிப்பருவத்துக் கட்டழியாக மூவுலகையும் தன்வயப்படுத்தும் தேஜசுடன் விளங்குகிறாள். கானகத்துச் சித்தரெல்லாம் காயசித்தி பெறுவதற்கு இவளையே வழிபடுவர். பாரதியார் கூட “வாலைக்குமரியடி கண்ணம்மா” என்று இவளையே குறிப்பிட்டுள்ளார். மலையாள தேசத்தில் இவள் பகவதி எனப் போற்றப் படுகின்றாள். மங்கை உருவில் காட்சிதரும்போது இவளே திரிபுர சுந்தரி என்று விளிக்கப்படுகின்றாள். குழந்தையாக காட்சி தரும்போது, இவளே பாலா என்று அன்போடு அழைக்கப்படுகிறாள். பாலா என்னும் தெய்வம்தான் நமது ப்ரம்மசக்தி ஆலயத்தில் சந்தான பகவதி என்ற புதிய அவதாரம் எடுத்து நம்முன்னே காட்சியளிக்கின்றது.
சந்தான பகவதி இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமாக அருள்பாலிக்கின்றாள். இவளது மூர்த்தம் சூலினி துர்க்கையின் அம்சமும் இணைந்த திருவுருவமாக விளங்குகின்றமையால் நெற்றியில் சூலம் அமையப்பெற்றுள்ளது. வலது கையின் நடுவிரலும் மோதிர விரலும் வாயில் வைத்து சப்புக் கொட்டி ருசிபார்த்தபடி குழந்தைக்கே உரித்தான இயல்புடன் அமைந்துள்ளன. இடது கை, இடது கால் பெருவிரலைப் பிடித்தபடி இருக்கிறது. ஆறு விரல்களுடன் கூடிய இடது காலின் பாதம் பூமி உருண்டையின் மீது படிந்துள்ளது. இதன் உயரம் இரண்டு அடி. செள என்ற பீஜத்தின் நாடித்துடிப்பாக இருந்துகொண்டு பக்தர்களுக்கு வேண்டிய வரங்களி வாரி வழங்கிடச் சித்தமாக இருக்கிறாள். எல்லா வரங்களையும் அவளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தகுதியையும் அவளே நமக்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறாள்.
மூலாதார நாயகியாக விளங்கும் சந்தான பகவதி தேவி மணிபூரகம், சுவாதிஸ்டானம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆதாரங்களில் ப்ரத்தியங்கிராதேவி, வராஹி தேவி, ஸ்ரீசக்ரநாயகி, பாலகணபதி, பாலமுருகன் ஆகிய சக்திகளை எழச்செய்து ஆட்சி செலுத்தி வருகின்றாள். சூட்சும சக்தியான பிரம்மசக்தி, திரிபுரசுந்தரி வடிவில் சகஸ்ரார கமலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.
காலையும் மாலையும் சந்தான பகவதிக்கு நித்ய பூஜை நடைபெற்று வருகின்றது. காலை 6 மணிமுதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். தினமும் காலையில் அபிஷேக ஆராதனைகள் உண்டு. பெளர்ணமி நாளில் சிறப்பு பூஜை உண்டு.
சந்தான பகவதிதேவி அம்மா பாலாம்பிகை தேவியாரின் கையைப் பிடித்துக் கொண்டு எப்போதும் நீங்காத அன்புடன் அம்மாவோடு வலம் வருகிறாள். அவள் வேறு, அம்மா வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெருங்கி இருக்கிறார்கள். எனவே, அருள்வாக்கு இல்லாத சாதரண சமயங்களில் கூட அம்மாவின் அசைவும் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் சந்தான பகவதியின் சாயலாகவே வெளிப்படுகின்றது. இது பிரத்யட்சமாக அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.